

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள மமூன் ராணுவ முகாமில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி இர்ஷத் அகமதை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முக்கிய புகைப்படங்களை இர்ஷத் பகிர்ந்து கொண்டதாக மத்திய உளவுத் துறை கொடுத்த தகவலின் பேரில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கள் கடந்த மாதம் தாக்குதல் நடத்திய பதான்கோட் விமானப்படை தளத் தில் உள்ள முக்கியமான ராணுவ தளவாடங்களை, இர்ஷத் தனது ஸ்மார்ட்போன் மூலம் படம் எடுத் துள்ளார். பின்னர் அவற்றை ஜம்மு வில் இருந்த மற்றொரு ஐஎஸ்ஐ உளவாளியான சஜாத் என்பவருக்கு அனுப்பி உள்ளார்.
இதைக் கண்காணித்த மத்திய உளவுத் துறைக்கு அதிகாரிகள் பஞ்சாப் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் அடிப் படையில் இர்ஷத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் ஏற்கெனவே சஜாத் கைது செய்யப் பட்டார். இந்நிலையில், இர்ஷத் தெரிவித்த தகவல் தொடர்பாக போலீஸார் சஜாதிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இர்ஷத் அனுப்பிய புகைப்படங்களை சஜாத் பாகிஸ்தானுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இர்ஷாத்திடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பதான்கோட்டில் ஐஎஸ்ஐ உளவாளிகள் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.