நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி: இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி: இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைப்பு
Updated on
1 min read

நாடாளுமன்றத்தி்ல் பெகாசஸ் பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது முதலேயே இந்த விவகாரத்தை எழுப்பி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தவறேதும் நடைபெறவில்லை என மத்திய அரசு மறுத்து வருகிறது.

பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று கூடி விவாதித்தனர். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக்கூட்டத்தில் பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக்குழு விசாரணைக்கு சம்மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாசஸ் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

மக்களைவையில் கேள்வி நேரத்துக்கு பின்பு பெகாசஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் அவையின் அலுவலகள் நடைபெறாமல் போனது. அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று காலை தொடங்கியது முதலேயே இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளி ஏற்பட்டது. காலை அவை கூடியதில் இருந்து அடுத்தடுத்து 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 2.00 மணிவரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in