Published : 29 Jul 2021 09:16 AM
Last Updated : 29 Jul 2021 09:16 AM

பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் சந்திப்பு

புதுடெல்லி

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

அமெரிக்க அதிபர்ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசின் வாழ்த்துகளை பிரதமரிடம் பிளிங்கன் தெரிவித்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் முன்னதாக தாம் நடத்திய ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை குறித்து பிரதமரிடம் விளக்கிய அவர், பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் & முதலீடு, பருவநிலை மாற்றம் மற்றும் அறிவியல் & தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதியை வெளிப்படுத்தினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தமது வாழ்த்துகளை பிளிங்கனிடம் பிரதமர் தெரிவித்தார். குவாட் அமைப்பு, கோவிட்-19 மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றில் அதிபர் பிடன் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

பல்வேறு இருதரப்பு மற்றும் பலதரப்பு விவகாரங்களில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அதிகரித்து வரும் கூட்டு குறித்தும், இதை வலுவான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமிக்க ஒத்துழைப்பாக மாற்ற இரு நாடுகளுக்கிடையேயான உறுதி குறித்தும் பிளிங்கன் பாராட்டு தெரிவித்தார்.

ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் விடுதலைக்கான விழுமியங்களில் அமெரிக்க மற்றும் இந்திய சமூகங்கள் ஆழமான உறுதியை பகிர்ந்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் சிறப்பான பங்காற்றியுள்ளதாக தெரிவித்தார்.

கோவிட்-19 சவால்கள், சர்வதேச பொருளாதார மீட்சி மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான கூட்டு வரும் வருடங்களில் இன்னும் அதிக முக்கியத்துவம் பெறும் என்று பிரதமர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x