Published : 28 Jul 2021 07:03 PM
Last Updated : 28 Jul 2021 07:03 PM

பிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்: மாநிலங்களவையில் தகவல்

புதுடெல்லி

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்.

அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில், 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டன. இவற்றில் 28.99 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 18.50 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டன.

அதோடு பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் வட்டி மானிய திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 5.81 லட்சம் பயனாளிகள் வட்டி மானியம் பெற்றுள்ளனர்.

2022ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடுகள் என்ற அரசின் தொலைநோக்குப்படி, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2015ம் ஆண்டு முதல் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

மாநிலங்கள் தெரிவித்த திட்டத்தின் அடிப்படையில் சுமார் 113 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டன. இவற்றில் 84.40 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க, மத்திய உதவியாக ரூ.1.82 லட்சம் கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவற்றில் ரூ.1.06 லட்சம் கோடி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசின் முகமைகளுக்கு வழங்கப்பட்டன.

மாநிலங்கள் புதிய நகரங்களை உருவாக்க, செயல்பாடு அடிப்படையில் 8 மாநிலங்களுக்கு ரூ.8,000 கோடியை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக 15-வது நிதி ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் ஒரு நகரத்தை ரூ.1000 கோடி செலவில் உருவாக்க முடியும். தற்போது 8 மாநிலங்கள் புதிய நகரங்களை ரூ.8,000 கோடியில் உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 30ம் தேதி வரை, இந்த நகரங்கள் 5,956 திட்டங்களை ரூ.1,79, 413 கோடிக்கு டெண்டர் விட்டுள்ளன. இவற்றில் 5,314 திட்டங்களை ரூ.1,49,029 கோடி மதிப்பில் மேற்கொள்வதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 2,734 திட்டங்கள் ரூ,46,769 கோடி மதிப்பில் நிறைவடைந்துள்ளன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் வரை ரூ.23,925 கோடி வழங்கியுள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x