

ஆபாசப்பட வழக்கு சர்ச்சையில் கைதாகியுள்ள தொழிலதிபரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ்குந்த்ராவின் ஜாமீன் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னதாக, நடந்த விசாரணையின் போது ராஜ்குந்தராவின் வழக்கறிஞர் அபட் போண்டா, 'எனது கட்சிக்காரருக்கு ஜாமீன் ஏன் மறுக்கப்படுகிறது. அவர் என்ன தீவிரவாதியா' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர், ராஜ்குந்த்ரா இந்த வழக்கில் டிஜிட்டல் ஆதாரங்களை ராஜ்குந்த்ரா அழித்திருப்பதாகவும் வெளியில்விட்டால் மேலும் ஆதாரங்களை சிதைப்பார் என்றும் தெரிவித்தார்.
வெப் சீரிஸ் எடுக்கிறேன் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜ் குந்த்ராவுக்கான போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவரது ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. ராஜ்குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளி ரயான் தோர்பின் ஜாமீன் மனுக்களை மும்பை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஏற்கெனவே இரண்டு வாரங்களாக ராஜ்குந்த்ரா மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைபட்டிருக்கும் நிலையில் அவரது காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ராஜ் குந்த்ராவின் ஹாட் ஷாட்ஸ், பாலி ஃபேம் ஆகிய செயலிகளை போலீஸார் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
இந்தச் செயலி மூலம் வெளிநாட்டிலிருந்து கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்த ராஜ்குந்த்ரா அதனை அவரது வங்கிக் கணக்கிலும் மனைவி ஷில்பாவின் வங்கிக் கணக்கிலும் செலுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், ராஜ்குந்த்ரா இந்தப் பணத்தை பிட்காயினில் முதலீடு செய்துள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.