

தங்களின் அரசில் குரல் கொடுக்க அனைத்து மக்களும் தகுதியுடையவர்கள். அவர்கள் யாராக இருந்தாலும் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளின்கென் தெரிவித்தார்.
இந்தியர்களும், அமெரிக்கர்களும் மனிதர்கள் மீது மதிப்புடையவர்கள், சமமான வாய்ப்பளிப்பவர்கள், சட்டத்தின் ஆட்சியை நடத்துபவர்கள், அடிப்படைச் சுதந்திரம், மதச் சுதந்திரம், மத நம்பிக்கை ஆகியவற்றில் நம்பிக்கையுள்ளவர்கள் எனவும் அந்தோனி தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளின்கென் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இன்று சிவில் சொசைட்டி உறுப்பினர்களைச் சந்தித்தார். அப்போது 45 நிமிடங்கள் பேசினார்.
அவர் பேசியதாவது:
''வெற்றிகரமான ஜனநாயகத்தில் சிறந்த சிவில் சமூகம் உள்ளடங்கி இருக்கும். ஜனநாயகத்தை மேலும் வெளிப்படையாகவும், முழுமையானதாகவும், தகுதியானதாகவும் மாற்ற சிவில் சமூகம் அவசியம். லட்சக்கணக்கான மக்களுக்கு இடையிலான வர்த்தகக் கூட்டுறவு, கல்வி, மதப் பிணைப்புதான் ஒட்டுமொத்த உறவுக்கும் முக்கியத் தூண்கள்.
மிக முக்கியமாக நாம் பகிர்ந்தளிக்கப்பட்ட மதிப்புகளால் இணைக்கப்பட்டுள்ளோம். பகிரப்பட்ட ஆசைகள்தான் நம் மக்களுக்கு இடையே பொதுவானதாக இருக்கிறது என நம்புகிறேன். மனித மாண்பு மீதும், வாய்ப்புகளைச் சமமாக வழங்குதல், சட்டத்தின் ஆட்சி, அடிப்படை சுதந்திரம், மதச் சுதந்திரம், மத நம்பிக்கை ஆகியவற்றை இந்திய, அமெரிக்க மக்கள் நம்புகிறார்கள்.
தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் அனைத்து மக்களும் குரல் கொடுக்கத் தகுதியானவர்கள். யாராக இருந்தாலும் மரியாதையாக நடத்தப்படவேண்டும். இதுதான் ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்கும். நம்முடைய முக்கிய நோக்கம் என்பது இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தத்தை வழங்கி கடமையைச் செய்வதாகும்.
ஜனநாயகத்துக்கும், சர்வதேச சுதந்திரத்துக்கும் உலக அளவில் அச்சுறுத்தல் இருக்கிறது. ஜனநாயகத்தின் சரிவு எங்கிருந்தாலும் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து குரல் கொடுக்கும்.
அனைத்தையும் ஒன்றாக இணைக்கும்போது, உலகில் நாடுகளுக்கு இடையிலான உறவு முக்கியமானதாக இருக்கும். நாடுகளுக்கு உறவு மட்டுமல்லாமல், அரசாங்கங்களுக்கு இடையே சேர்ந்து பணியாற்றுவதும் முக்கியம் என நினைக்கிறேன்.
இந்தியா, அமெரிக்க நாடுகளின் ஜனநாயகம் என்பது வளர்ச்சிக்காகப் பணியாற்றுகிறது. நண்பர்களாக இதுபற்றிப் பேசினால், நண்பர்களாக இதைப் பற்றிப் பேசுகிறோம். ஏனென்றால் ஜனநாயகத்தை வலுப்படுத்துதலும், நம்முடைய சிந்தனைகளை நனவாக்குவதும் சவாலானது''.
இவ்வாறு அந்தோனி பிளின்கென் தெரிவித்தார்.
45 நிமிடங்கள் வரை சிவில் சொசைட்டி உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பின்போது, இந்தியாவில் உள்ள மதச் சுதந்திரம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், லவ் ஜிகாத், பத்திரிகையாளர்கள் கைது, சமூக ஆர்வலர்கள் கைது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் ஆகியவை குறித்து எடுத்துக் கூறி விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் போராட்டம், அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.