Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

கேரளாவில் திருமணத்தின்போது அரசு ஆண் ஊழியர்களுக்கு வரதட்சணை மறுப்பு சான்றிதழ் கட்டாயம்

கேரளாவில் அரசுப் பணியில் இருக்கும் ஆண்கள் தங்கள் திருமணத்தின் போது தங்கள் உயர் அதிகாரியிடம் வரதட்சணை மறுப்பு சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வரதட்சணைக் கொடுமைகள் அதிகளவில் நடந்து வருகிறது. அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமதுகானே, வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வூட்ட ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில் வரதட்சணையாக அதிக பணம், நகைகளை வாங்குவது அரசுப்பணியாளர்கள் மட்டத்தில்தான் அதிகம்இருப்பதை ஆழமாக உள்வாங்கியிருக்கும் கேரள அரசு இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை எடுத்துள்ளது.

அதன்படி, கேரளாவில் அரசுப்பணியில் இருக்கும் ஆண்கள் தங்கள் திருமணத்தின்போது பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை வாங்கவில்லை என்னும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சான்றிதழில் மணமகள், மணமகளின் பெற்றோர் ஆகியோர் கையெழுத்திட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழை திருமணம் முடிந்த மாதத்திலேயே அவர்,அவர்களது உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஒருங்கிணைப்பு செய்கிறது. இதன் இயக்குநர் அனுபமா, இதுகுறித்து கேரளத்தின் அனைத்து அரசுத்துறை இயக்குனரகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுபோக ஒவ்வொரு மாவட்டத்திலும் வரதட்சணை தடுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவரிடம் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் துறையில் பணி செய்வோரின் திருமண விவரங்கள், வரதட்சணை மறுப்பு குறித்து அறிக்கைதாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரதட்சணை வாங்கிக்கொண்டு அரசு அதிகாரிகள் திருமணம் செய்தது தெரியவந்தால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் கேரள அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x