Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

இலவச தரிசனம் இல்லை: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருப்பதி

திருப்பதியில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவகர் ரெட்டி தலைமையில் தேவஸ்தானத்தின் அனைத்து துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அதிகாரி ஜவஹர் ரெட்டி பேசியதாவது:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் துணைக் கோயில்களுக்கு திரளான பக்தர்கள் நன்கொடையாக விவசாய நிலங்களை வழங்கியுள்ளனர். இந்தநிலங்களில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் விதத்தில், இவற்றை குத்தகைக்கு விட்டு, இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களை தேவஸ்தானமே விலைக்கு வாங்கி அதனை ஏழுமலையானின் நைவேத்தியத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் துணைக் கோயில்களான அப்பலயகுண்டா பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவில், சீனிவாசமங்காபுரம் சீனிவாச பெருமாள் கோயில் ஆகிய இரு கோயில்களிலும் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்படும். துணைக் கோயில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பசுக்களை பராமரிக்க, கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு பால் சேகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஏழுமலையான் கோயிலில்கரோனா பரவல் காரணமாக இலவச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் அலை எச்சரிக்கை இருப்பதால் தற்போதைக்கு இலவச தரிசனம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x