மோதலில் உயிரிழந்த 5 போலீஸார் உடலுக்கு முதல்வர் அஞ்சலி: அசாம்-மிசோரம் எல்லையில் 3 கமாண்டோ படை வீரர்கள்

மோதலில் உயிரிழந்த 5 போலீஸார் உடலுக்கு முதல்வர் அஞ்சலி: அசாம்-மிசோரம் எல்லையில் 3 கமாண்டோ படை வீரர்கள்
Updated on
1 min read

அசாம் - மிசோரம் எல்லையில் இரு மாநில மக்கள் மற்றும் போலீஸார் இடையே நடந்த மோதலில் உயிரிழந்த 5 போலீஸார் உடலுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா அஞ்சலி செலுத்தினார். மிசோரம் எல்லைக்கு 3 கமாண்டோ படைப்பிரிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அசாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. அசாம் எல்லையான சச்சாரில் நேற்று முன்தினம் இரு மாநிலங்களைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் போலீஸாரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 5 போலீஸார் உட்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், அசாம் மாநிலம் சில்சாரில் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 5 போலீஸாரின் உடல்களுக்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா நேற்று அஞ்சலி செலுத்தினார். சில்சார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஹிமந்தா பிஸ்வ சர்மா கூறுகையில், ‘‘மாநில எல்லையை காக்க மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். வனப்பகுதிதான் பிரச்சினையாக உள்ளது. அசாம் மாநிலம் தனது வனப்பகுதியை காக்க விரும்புகிறது. இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. மிசோரம் எல்லையை ஒட்டியுள்ள சச்சார், கமீம்கஞ்ச், ஹைலகன்டி ஆகிய மாவட்டங்களில் 3 கமாண்டோ பட்டாலியன் படையினர் நிறுத்தப்படுவார்கள். இது அரசியல் பிரச்சினையல்ல. இரு மாநிலங்களுக்கும் இடையேநீண்ட காலமாக இருக்கும் எல்லைபிரச்சினை. அசாம் மாநில வனப்பகுதிகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்’’ என்றார். காவலர்கள் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அசாம் மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, மிசோரம் முதல்வர் சோரம்தங்கா ஆகியோரிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, இரு மாநிலஎல்லையில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாணுமாறும் இரு முதல்வர்களையும் அமித் ஷா கேட்டுக் கொண்டார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in