

பீஹாரின் பாடலிபுத்ரா தொகுதியில் மிசா பாரதி வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதாதள பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்த ராம்கிருபால் யாதவ், பாரதிய ஜனதாவில் சேர இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ராம்கிருபால் டெல்லியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகை யில், “எனது குருதி மற்றும் வேர்வையை சிந்தி கட்சியை வளர்த்தவன். நான் மகளாகக் கருதும் மிசாவை எனது வீட்டிற்கு அனுப்பி உணர்வுப் பூர்வமான தாக்குதல் அல்லது அரசியல் நாடகம் நடத்துகிறார்கள். இருப்பினும் நான் இதுவரை கட்சிக்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசாமல் இருக்கிறேன். எனக்கு திறந்திருக்கும் வேறுபல வாய்ப் புகள் மீது யோசித்து முடிவு எடுப்பேன்” என்றார்.
பாடலிபுத்ராவில் போட்டியிடும் விருப்பத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே லாலுவிடம் கூறியதாகவும் இது அந்த தொகுதிவாசிகள் மற்றும் கட்சித் தொண்டர்களின் விருப்பம் என்றும் ராம்கிருபால் தெரிவித்தார்.
பாட்னா தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வென்றவரான ராம்கிருபால், தற்போது ராஜ்யசபை எம்பியாக இருக்கிறார்.
இவர் விரும்பும் அதே தொகுதியில் ராம்கிருபாலை போட்டியிட வைக்க, ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இருகட்சிகளுமே விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதில் ராம்கிருபால், பாஜகவில் இணைய வாய்ப்புகள் அதிகம் எனவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், லாலுவின் மகளான மிசா பாரதி, ராம்கிருபால் யாதவை பாடலிபுத்ரா தொகுதியில் எதிர்க்கத் தயாராகி விட்டார். அவரை சந்திக்க முயன்றதை ஒரு அரசியல் நாடகம் எனவும் உணர்ச்சிப்பூர்வமான தாக்குதல் எனவும் ராம்கிருபால் விமர்சித்துள்ளதை கண்டித் துள்ளார் பாரதி.