

ஹைதராபாத் இப்ரஹிம்பட்டினத்திலுள்ள தனியார் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் உடல் கருகி பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.
சம்பவம் குறித்து இப்ரஹிம்பட்டினம் போலீஸ் உதவி ஆணையாளர் நாராயணா 'தி இந்து' (ஆங்கில) நாளிதழுக்கு அளித்த பேட்டியில், " இப்ரஹிம்பட்டியில் இருக்கிறது ஹசிதா பார்மாசிடிக்கல்ஸ் தொழிற்சாலை. இங்கு இன்று (திங்கள்கிழமை) காலை 6.15 மணியளாவில் கொதிகலன் வெடித்தது.
இதில் அங்கு பணியிலிருந்தவர்கள் 6 பேர் உடல் கருகி பலியாகினர். அவர்களது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளது. இறந்தவர்களில் 4 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்" என்றார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் தொழிற்சாலைக்கு வெளியே குழுமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.