டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
Updated on
2 min read

நாடு முழுவதும் ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடக்கிறது.

கடந்த 9-ம் தேதி டெல்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) வளாகத்தில் இந்தியா வுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய தாகக் கூறி கண்ணய்யாவை போலீ ஸார் கைது செய்தனர். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது. கண்ணய்யாவை மார்ச் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கண்ணய்யா சார்பில் அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “கண்ணய்யா குமாரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நீதிமன்றம் தலையிட்டு அவருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர் மற்றும் ஏ.எம்.சாப்ரே அடங்கிய அமர்வு, வெள்ளிக்கிழமை பரிசீலிப்பதாக தெரிவித்தது.

இதற்கிடையே டெல்லி, ஜம்மு, மும்பை, குவாஹாட்டி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கண்ணய்யாவை விடுவிக்கக் கோரி நேற்று போராட்டம் நடைபெற்றது.

இதுதவிர, ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தில் தேச விரோத செயல் நடைபெறுவதாகக் கூறி பாஜக, ஏபிவிபி உள்ளிட்ட சில அமைப்பு களும் போராட்டத்தில் ஈடுபட்டன. தலிபான் கலாச்சாரத்தை இந்தியா வில் அனுமதிக்க முடியாது என்றும் கண்ணய்யாவுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

குடும்பத்தினருக்கு பாதுகாப்பு

நீதிமன்ற வளாகத்தில் கண்ணய்யா மீது தாக்குதல் நடத்தப் பட்டதையடுத்து, பிஹார் மாநிலத் தில் உள்ள அவரது சொந்த கிராமத் தில் உள்ள குடும்பத்தினரின் பாது காப்புக்காக ஆயுதம் ஏந்திய 5 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக பெகுசாரை காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் நேற்று தெரிவித்தார்.

பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் வன்முறையில் ஈடுபட்ட வழக்கறிஞர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்று இந்திய வழக்கறிஞர் கள் சங்கத்தின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தவறு செய்தவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்திய குழு கூட்டம் 17, 18 தேதி களில் டெல்லியில் நடைபெற்றது. இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜேஎன்யூ விவகாரத்தில் தேச விரோதிகள் என இடதுசாரிகள் மீது பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் குற்றம் சாட்டி உள்ளது. இது தவறான குற்றச்சாட்டு. இது கண்டிக் கத்தக்கது. மதவாத சக்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து 6 இடதுசாரி கட்சிகள் வெள்ளிக்கிழமை கூடி விவாதிக்கும்.

உயர் கல்வி நிறுவனங்களில் தங்களது மதவாத செயல் திட் டத்தை செயல்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கிறது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி ஆகியவற்றில் சமீபத்தில் நடந்த சம்பவங்களே இதற்கு சான்று என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எம்எல்ஏவிடம் விசாரணை

பாட்டியாலா நீதிமன்ற வளா கத்தில் கடந்த திங்கள்கிழமை பத்திரிகையாளர்கள் மற்றும் ஜேஎன்யூ மாணவர்கள் மீது தாக்கு தல் நடத்தப்பட்டது. பாஜக எம்எல்ஏ ஓ.பி.சர்மாவும் தாக்குதலில் ஈடுபட்ட தாக வீடியோ காட்சிகள் வெளி யானது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக விசாரணைக்கு வருமாறு சர்மாவுக்கும் 3 வழக்கறி ஞர்களுக்கும் டெல்லி போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதன் படி, நேற்று ஆஜரான சர்மாவிடமும் வழக்கறிஞர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

நேற்று முன்தினம் பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்த வன்முறை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் 6 மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய ஆணையர்கள் குழுவை அமைத்தது. நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்திய இக்குழு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தனது அறிக் கையை சமர்ப்பித்தது.

கண்ணய்யா மீதான வழக்கு வாபஸ்?

ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமார் மீது டெல்லி போலீஸார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்திருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கண்ணய்யா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக வீடியோ காட்சிகள் உள்ளன. ஆனால், அதில் அவர் நாட்டுக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான ஆடியோ (குரல்) தெளிவாக பதிவாகவில்லை. எனவே, குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாவிட்டால் கண்ணய்யா மீதான தேசத் துரோக வழக்கை டெல்லி போலீஸ் வாபஸ் பெற வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in