

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கான விதிகளை வகுக்க 2022-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கான விதிகளை வகுக்க அரசு நிர்ணயித்திருந்த காலக்கெடு முடிந்துவிட்டதா என்பது குறித்து காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகய் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தராய் மக்களவையில் இன்று பதில் அளித்தார்.
''குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ம் ஆண்டு டிசம்பர் 12்-ம் தேதி இயற்றப்பட்டு, 2020-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் விதிகளை வகுக்க காலக்கெடுவை 2022-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதிவரை நீட்டிக்க மக்களவை, மாநிலங்களவையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது'' என்று நித்யானந்தராய் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமண மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிவரை இந்தியாவில் இருக்கும் இந்தச் சமூகத்தைச் சேர்ந்த அகதிகள் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்படமாட்டார்கள், அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.
நாடாளுமன்ற நடைமுறையின்படி, ஒரு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டால், அடுத்த 6 மாதத்துக்குள் அந்தச் சட்டத்துக்கான விதிகளை வகுக்க வேண்டும் அல்லது அவகாசம் பெற வேண்டும். அந்த அடிப்படையில் சிஏஏ சட்டத்தில் விதிகளை வகுக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.