

பெண்களை வெப்சீரிஸில் நடிக்கவைப்பதாகக் கூறி, ஏமாற்றி, ஆபாசப் படம் எடுத்ததாக கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ஜாமீன் மனு இன்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
வெப் சீரிஸ் எடுக்கிறேன் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரைக் கடந்த திங்கள்கிழமை இரவு மும்பை போலீஸார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜ் குந்த்ராவை 27-ம் தேதிவரை போலீஸார் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆபாசப் படங்கள் எடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் போலீஸார் தன்னைக் கைது செய்வதிலிருந்து தப்பிக்க ரூ.25 லட்சம் வரை ராஜ் குந்த்ரா லஞ்சம் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ராஜ் குந்த்ராவுக்கான போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.
இதற்கிடையே ஆபாசப் படங்கள் எடுத்து வெளிநாட்டிலிருந்து ஏராளமான பணத்தை ராஜ் குந்த்ரா பெற்றுள்ளார். இந்தப் பணத்தைத் தனது வங்கிக் கணக்கிலும், மனைவி ஷில்பா ஷெட்டியின் வங்கிக் கணக்கிலும் வைத்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், “ஆபாசப் படங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தவகையில் கோடிக்கணக்கில் ராஜ் குந்த்ரா பணம் பெற்றுள்ளார். இந்தப் பணம் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தணிக்கை செய்ய நிதி தணிக்கையாளரையும் நியமித்துள்ளோம்.
ராஜ் குந்த்ராவின் ஹாட் ஷாட்ஸ், பாலி ஃபேம் ஆகியவற்றிலிருந்து பணம் பரிமாறப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை பிட்காயின்களில் ஏதேனும் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.