

கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சிக்காக தான் ஆற்றிய பணியை கண்ணீரோடு நினைவுகூர்ந்தார்.
கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. அமைச்சரவையில் பதவி கிடைக்காத பாஜக எம்எல்ஏக்கள் எடியூரப்பாவை விமர்சிக்கத் தொடங்கினர்.
கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர், ‘முதல்வர் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் அவரால் திறம்பட செயல்பட முடியவில்லை. கரோனா நெருக்கடியை சரியாக கையாளவில்லை. அவரது மகன் விஜயேந்திரா நிழல் முதல்வராக செயல்படுகிறார். எனவே, எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும்’ என மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, எடியூரப்பாவை ராஜினாமா செய்யும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த 16-ம் தேதி டெல்லி சென்ற எடியூரப்பா, அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி, பெங்களூருவில் சாதனை விழா நடந்தது. அதில் எடியூரப்பா பேசியதாவது:
கர்நாடக மாநிலத்தில் ஒரு ஆர்எஸ்எஸ் சேவகனாக மிகவும் கஷ்டப்பட்டு பாஜகவை வளர்த்தேன். எனது கடின உழைப்பை பார்த்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எனக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக கூறினார். பதவி வேண்டாம் என கூறி, கர்நாடகாவில் கட்சியை வளர்க்கும் வேலையை மட்டும் தொடர்ந்து செய்தேன்.
எனது கடும் உழைப்பின் காரணமாகவே அதிகார பலம், பண பலம், சாதி பலம் என எல்லாவற்றையும் கடந்து ஷிகாரிபுராவில் என்னால் 7 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற முடிந்தது. 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாஜகவில் பதவி வழங்கப்படுவதில்லை என முடிவெடுக்கப்பட்ட போதும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா எனக்கு மட்டும் விதிவிலக்கு அளித்தனர். எனக்கு முதல்வர் பதவி வழங்கியதோடு, 2 ஆண்டுகள் ஆட்சி நடத்தவும் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2 ஆண்டு சாதனையை கொண்டாடும் வேளையில் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதற்காக தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன்.
இவ்வாறு கண்ணீர் மல்க அறிவித்தார்.
இதையடுத்து, ஆளுநர் தார்வர்சந்த் கெலாட்டை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரது ராஜினாமாவை உட னடியாக ஏற்றுக்கொண்ட ஆளுநர், எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையும் கலைக்கப்படு வதாக அறிவித்தார். புதிய முதல் வர் பொறுப்பேற்கும் வரை அவரே காபந்து முதல்வராக தொடரவும் உத்தரவிட்டார்.
புதிய முதல்வர் யார்?
ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, ‘‘அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். யாருடைய பெயரையும் நான் பரிந்துரை செய்யவில்லை’’ என்றார். இதனிடையே, முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்காக அமைச்சர்கள் பசவராஜ் பொம்மை, முருகேஷ் நிரானி, பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.