

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவை களும் நேற்றும் முடங்கின. மக்களவையில் அமளிக்கு நடுவே, தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்திய அரசியல் தலைவர்கள், செய்தி யாளர்கள், நீதிபதிகளின் செல் போன் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தால் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றம் முடங்கியது.
இந்த சூழலில் மக்களவை, மாநிலங்களவை நேற்று கூடியதும், கார்கில் வெற்றி தினத்தையொட்டி அந்த போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதன்பிறகு ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதன்பிறகு பெகாசஸ் விவகா ரம், விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அன்றாட அலுவல்கள் முடங்கின.
மக்களவையில் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதியில் கூடி கோஷமிட்டனர். அமளியால் பலமுறைஅவை ஒத்திவைக்கப்பட்டது.
இதன்பிறகு பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியதும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திவால் நடைமுறை சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார். அவர் பேசும்போது, "பயறு வகைகளுக்கான அடிப்படை சுங்க வரி10 சதவீதம் வரை குறைக்கப்பட் டிருக்கிறது" என்று தெரிவித்தார். தொடர் அமளியால் பிற்பகல் 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மசோதா அறிமுகம்
இதன்பிறகு மக்களவை கூடியதும் தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை மசோதா, விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின் மூலம் தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப் படுத்துதல் தொழில்நுட்ப நிறு வனம், ஹரியாணா மாநிலம், குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும். புதுமை யான தொழிற்படிப்புகளை அறிமுகம் செய்ய அதிகாரம் வழங்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நிறுவனங்கள் (திருத்த) மசோதாவும் மக்கள வையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர் அமளிக்கு நடுவே இரு மசோதாக்களும் நிறைவேற்றப் பட்டன. எதிர்க்கட்சி எம்.பி.க் களின் தொடர் அமளியால் நாள் முழுவதும் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு
பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக சார்பில் நேற்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவை தொடங்கியதும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதியில் கூடி அமளியில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலிலும் இதேநிலை நீடித்தது. இதைத் தொடர்ந்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. - பிடிஐ