

மகாராஷ்டிராவில் கடந்த 22-ம்தேதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராய்காட், சதாரா, ரத்னகிரி, தாணே, கோலாப்பூர், சிந்துதுர்க் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை, போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முப்படைகளும் ஒன்றிணைந்து, 'வர்ஷா 21' என்ற பெயரில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
ராய்காட் மாவட்டத்தின் மகத் பகுதியில் கடந்த 22-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 90 பேர் மண்ணில் புதைந்தனர். அந்த பகுதியில் நேற்று வரை 53 உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை காணவில்லை. சதாரா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 41 பேர், ரத்னகிரியில் 21 பேர், தாணேவில் 12 பேர், கோலாப்பூரில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவு பாதிப்பு குறித்து மகாராஷ்டிர அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் 21 மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 6 மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் நிலச்சரிவுகளில் 164 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேரை காணவில்லை.
கடந்த ஜூன் மாதம் முதல் ஏற்பட்ட உயிரிழப்புகளை கணக் கெடுத்தால் இதுவரை 228 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மனிதர்கள் மட்டுமன்றி கால்நடைகளும் மடிந்துள்ளன. இதுவரை 3,248 விலங்குகள் இறந்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து 2.5 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்வதால் மீட்புப் பணிகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அடுத்த சில நாட்களில் பாதிக்கப் பட்டோருக்கான நிவாரண உதவிகள் அறிவிக்கப்படும். தற் போதைய இயற்கை பேரிடர் பல்வேறு பாடங்களை கற்று தந்துள்ளது. மகாராஷ்டிராவின் அனைத்து மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை மையங்கள் அமைக்கப்படும். மகாராஷ்டிராவுக்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. வெள்ள பாதிப்புகளை கணக்கிட்ட பிறகு மத்திய அரசிடம் நிதியுதவி கோருவோம். வெள்ள நிவாரண பணிகளுக்கு தாராளமாக நிதி யுதவி வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.