

ஒலிம்பிக் போட்டியி்ல் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு தாயகம் திரும்பினார்.
டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், டோக்கியோவில் இருந்து அவர் விமானம் மூலம் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வழக்கமான நடைமுறையாக அவருக்கும் அவரது பயிற்சியாளருக்கும் விமான நிலையத்தில், ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே அவருக்கு மணிப்பூர் காவல்துறையில் (விளையாட்டுப் பிரிவு) கூடுதல் கண்காணிப்பாளர் பதவி அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
விமான நிலையத்தில் பேட்டியளித்த மீராபாய் சானு, "ஒலிம்பிக் போட்டிக்கு ஆயத்தமாவதற்காக நான் அமெரிக்கா சென்று பயிற்சி மேற்கொண்டேன். அது எனக்கு நல்ல பலனளித்தது. உலகமே கரோனா பெருந்தொற்றால் தவித்துக் கொண்டிருந்த நிலையில், விமானப் பயணம் எல்லாம் எட்டாக் கனியாக இருந்த சூழலிலும் மத்திய அரசும், ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவும் கடுமையாக முயன்று என்னை அமெரிக்கா அனுப்பிவைத்தது. இன்று அதற்கான பலன் கிடைத்துள்ளது.
ஒலிம்பிக் மெடல் கனவு மிகவும் நீண்டது. நான் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியின்போதும் முயன்றேன். ஆனால், அது இப்போது நனவாகியுள்ளது. எனது இலக்கை எட்டும் முயற்சிக்காக நான் நிறைய தியாகம் செய்துள்ளேன். ஒட்டுமொத்த தேசமும் என் மீது எதிர்பார்ப்பைக் கொண்டிருந்ததால் எனக்கு சிறிய பதற்றம் ஏற்பட்டது. போட்டிக்கு முதல் நாள் நிறைய யோசனைகள் வந்தன. நான் அவற்றையெல்லாம் புறந்தள்ளினேன்.
மாதவிடாய் பயம் இருந்தது. அதையும் கூட இது எல்லா பெண்களுக்கும் ஏற்படக்கூடியது தானே என்று ஒதுக்கினேன். துணிச்சலுடன் களம் கண்டேன். சீனா பளுதூக்குதலில் பயங்கர வலுவாக இருந்தது. இருப்பினும் நாம் அதை முறியடித்து வெள்ளி வென்றுள்ளோம். கனவு நனவாகிவிட்டது. ஐந்தாண்டு கால கடுமையான முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறினார்.
கடந்த 2000ம் ஆண்டில் கர்னம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றபின் தற்போது பளுதூக்குதலில் 2-வது வீராங்கனையாக சானு பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லமல் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனையும் சானு என்பது குறிப்பிடத்தக்கது.