

புனேயைச் சேர்ந்த அபேதா இனாம்தார் கல்லூரி மாணவர்கள் 14 பேர் மும்பையை அடுத்த முருத் கடற்கரைக்கு சுற்றுலா மேற்கொண்டு கடலில் குளித்த போது மூழ்கி இறந்தனர். இதில் துயரத்தில் ஆழ்ந்த மாணவர்களின் பெற்றோர்களை கல்லூரி நிர்வாகம் உதாசீனப்படுத்திய விவகாரம் சமூக வலைத்தளங்களில் வீடியோ மூலம் வைரலாகியுள்ளது.
இந்தக் கல்லூரியை நிர்வகிக்கும் மகாராஷ்டிரா காஸ்மாபாலிட்டன் கல்வி அமைப்பின் தலைவர் பி.ஏ.இனாம்தார் பெற்றோர்களை உதாசீனப்படுத்தி அவர்களை மனம் புண்படும் படியாக வசைபாடி வெளியே அனுப்பிய விவகாரம் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பரவலாக பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.
புதனன்று கல்லூரியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள் சுற்றுலாவில் உடன் சென்ற ஆசிரியர்கள், நிர்வாகிகள் அலட்சியமே மாணவர்கள் உயிரிழப்புக்குக் காரணம் என்று கடும் குற்றம்சாட்டினர்.
விபத்தில் பலியான மாணவி சபின் சய்யத் என்பவரின் தாயார் ஷகீலா சய்யத் கூறும்போது, “முருத்துக்குச் சென்று எனது மகளின் உடலை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கல்லூரி ஒரு உதவியைக் கூட செய்யவில்லை. என் மகளின் உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் செலவைக்கூட நாங்கள்தான் ஏற்றுக் கொண்டோம்.
இனாம்தாரிடம் பெற்றோர்கள் 11 கல்லூரி பாதுகாவலர்கள், 8 ஆசிரியர்கள், 3 ஊழியர்கள் மாணவர்களை கடலில் குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கவில்லை என்று கடுமையாக கேள்வி எழுப்ப, இனாம்தார் கோபாவேசமடைந்து ‘முதலில் கத்தாமல் மெதுவாக பேசுங்கள்’ என்று கூறியதோடு, கல்லூரி பியூனை அழைத்து பெற்றோர்களை வெளியே துரத்தி அடித்துள்ளார்.
இனாம்தாரின் இந்தச் செய்கைதான் தற்போது வாட்ஸ் அப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது, கடும் கண்டனங்களை பல்வேறு தரப்பிலிருந்தும் கிளப்பியுள்ளது.