‘‘எனக்கு எப்போதுமே அக்னி பரீட்சை தான்’’- கண்ணீர் விட்ட எடியூரப்பா

‘‘எனக்கு எப்போதுமே அக்னி பரீட்சை தான்’’- கண்ணீர் விட்ட எடியூரப்பா
Updated on
1 min read

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் எடியூரப்பா தனக்கு எப்போதுமே அக்னி பரீட்சை நடைபெறுவதாக கண்ணீர் மல்க கூறினார்.

கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடகமுதல்வராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சிக்கின்றனர்.

அத்துடன் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.

எடியூரப்பா அண்மையில் தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். அவர்களை எடியூரப்பா சமாதானம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது என்னை மத்திய அமைச்சர் பதவியை ஏற்குமாறு கூறினார். ஆனால் நான் கர்நாடகாவில் தான் இருப்பேன் என அவரிடம் கூறினேன். எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. கர்நாடகாவில் கட்சி தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

எனக்கு எப்போதுமே அக்னி பரீட்சை நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகள் கரோனாவை எதிர்த்து போராடுவதில் கழிந்தது. கர்நாடகாவில் பாஜகவுக்காக உழைப்பதே எனது லட்சியம் அதனை எப்போதும் செய்து வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in