Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

நாட்டிலேயே முதல்முறையாக வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிஆர்எஸ் பெண் எம்.பி.க்கு 6 மாதம் சிறை

ஹைதராபாத்

வாக்காளர்களுக்கு வாக்களிக்க லஞ்சம் கொடுத்ததாக நாட்டிலேயே முதல்முறையாக தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) சார்பில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மகபூபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மலோத் கவிதா. தேர்தல் சமயத்தில் மலோத்கவிதாவுக்கு வாக்களிக்க வலியுறுத்தி, அவருக்கு நெருங்கியவரான சவுகத் அலி என்பவர் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்தபோது தேர்தல் பறக்கும் படையினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.

விசாரணையில், மலோத் கவிதா கொடுத்த பணத்தை, அவருக்கு வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுத்தேன் எனவும் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சவுகத் அலியும் 2-வது குற்றவாளியாக மலோத் கவிதாவும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை நாம்பள்ளியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் எம்.பி. மலோத் கவிதா மற்றும் சவுகத் அலி ஆகிய இருவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனையும், இருவருக்கும் தலா 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேல்முறையீடு

மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் மலோத் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.இதன் மூலம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வாக்கு பெற முயன்றதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக பதவியில் உள்ள எம்.பி. ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x