

இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 9 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னோர் மாவட்டத்தில் உள்ளது சங்லா பள்ளத்தாக்கு. இங்கு கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால், மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அண்மையில் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் அங்குள்ள மலைப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த நூற்றுக்கணக்கான பெரிய பாறைகளும் சரிந்து விழுந்தன. அப்போது, மலை அடிவாரத்தில் இருந்த சுற்றுலா பயணிகளின் கார்கள் மீது பாறைகள் விழுந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்சிலரது நிலைமை கவலைக்கிட மாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, இந்தப் பாறைகள் விழுந்ததில் அங்கிருந்த ஆற்றுப்பாலம் இடிந்து தரைமட்டமானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இமாச்சல் அரசு தெரிவித்துள்ளது.