கன்வார் யாத்ரீகர்களை தடுக்க உத்தராகண்ட் எல்லையில் போலீஸ் குவிப்பு

கன்வார் யாத்ரீகர்களை தடுக்க உத்தராகண்ட் எல்லையில் போலீஸ் குவிப்பு
Updated on
1 min read

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை நடைபெறுவது வழக்கம். இந்த புனித யாத்திரையின் போது, வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ஹரித்துவாருக்கு வந்து அங்குள்ள கங்கை நதியில் இருந்து நீர் எடுத்து, அதனை தங்கள் பகுதிகளில் இருக்கும் சிவன் கோயிலுக்கு கொண்டு செல்வார்கள்.

கடந்த ஆண்டு கரோனா பரவலால் கன்வார் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. நடப்பாண்டிலும் கரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த யாத்திரையை உத்தராகண்ட் அரசு ரத்து செய்தது. எனினும், உத்தரபிரதேச அரசு இந்த யாத்திரைக்கு அனுமதி கொடுத்தது. பின்னர், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், கன்வார் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது.

எனினும், பக்தர்களில் ஒருபகுதியினர் வழக்கம் போல இந்த யாத்திரையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுபோல் அனுமதியை மீறி, கன்வார் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களை உத்தராகண்ட் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்ப அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதையடுத்து, உத்தரபிரதேசத்துடனான தங்கள் எல்லைப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரை உத்தராகண்ட் அரசு குவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in