

சீக்கியர்களை புண்படுத்தும் விதமாக புழக்கத்தில் இருந்து வரும் சர்தார்ஜி ஜோக்குகளை எப்படி தடுப்பது என்ற வழியை தெரிவிக்கும்படி, மனுதாரர்களிடமே உச்ச நீதிமன்றம் ஆலோசனை கேட்டுள்ளது.
சீக்கிய மதத்தினருக்கு எதிராக இணையதளங்களில் வலம் வரும் சர்தார்ஜி ஜோக்குகளை தடை செய்யுமாறு டெல்லியை சேர்ந்த குருத்வாரா மேலாண்மை கமிட்டி மற்றும் வழக்கறிஞர் ஹர்வீந்தர் சவுத்ரி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவர், ‘‘சீக்கிய மதத்தைச் சேர்ந்த பலர் முக்கிய தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். முன்னாள் பிரதமர் கூட சீக்கியர் தான்’’ என வாதாடினார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்,
‘‘முன்னாள் ராணுவ தளபதியும் சீக்கியர் தான். (நீதிபதி ஜே.எஸ் கேஹரை குறிப்பிட்டு) வெகுவிரைவில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கப் போகிறவரும் சீக்கியர் தான். வணிக ரீதியாக வலம் வரும் சர்தார்ஜி ஜோக்குகளை வேண்டுமென்றால் தடை செய்யலாம். ஆனால் சமூகத்துக்குள் வலம் வரும் ஜோக்குகளை எப்படி தடுப்பது? நீதிமன்ற கேன்டீனில் அமர்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் வேளையில், சக வழக்கறிஞர் ஒருவர் வந்து சர்தார்ஜி ஜோக்குகளை தெரிவித்தால், நீங்கள் கூட அதை ரசித்து சிரிப்பீர்கள். இப்படி ஜோக் அடிக்காதீர் என அவரை தடுக்க முடியுமா? அல்லது சக வழக்கறிஞருக்கு எதிராக அவதூறு வழக்குதான் தொடர முடியுமா?
எனவே, சர்தார்ஜி ஜோக்குகளை எப்படி தடை செய்வது என்பது குறித்து ஆறு வாரங்களுக்குள் மனுதாரர்களே ஆலோசனை வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.