Last Updated : 25 Jul, 2021 04:15 PM

 

Published : 25 Jul 2021 04:15 PM
Last Updated : 25 Jul 2021 04:15 PM

டெல்லியில் சுதந்திரத்துக்கான சூழல் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது; பெகாசஸ் ஹிரோஷிமா குண்டு போன்றது: சஞ்சய் ராவத் காட்டம்

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் | கோப்புப்படம்

மும்பை

ஜப்பானில் நடந்த ஹிரோமிஷிமா குண்டுவெடிப்பைப போன்றது பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம். ஹிரோஷிமா குண்டுவெடிப்பில் மக்கள் உயிரை இழந்தார்கள், இங்கு உயிராக நினைக்கும் சுதந்திரத்தை இழந்துள்ளார்கள் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தை கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தில் எழுப்பும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், ரோதோக் என்ற பக்கத்தில் அந்தகட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பெகாசஸ் செயலி மூலம் அரசியல் கட்சி்த் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் சமூக ஆர்வலர்கள், மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாள்கள் என 1,500 பேர் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சர்வதேச ஊடகங்கள் செய்தியின்படி, ஒரு லைசன்ஸ் மூலம் 50 செல்போன்களை ஒட்டுக் கேட்க முடியும் ஆண்டுக்கு 80 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும்.

அப்படியென்றால் இந்தியாவில் 300 செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதென்றால், குறைந்தபட்சம் 4.80 கோடி டாலர்கள் 2019-ம் ஆண்டு செலவிடப்பட்டிருக்க வேண்டும். 2020ம் ஆண்டிலும், 2021ம் ஆண்டும் அதிகமாக செலவிடப்பட்டிருக்க வேண்டும். யாருடைய கணக்கிலிருந்து இந்தப் பணம் செலவிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடக்குமா.

நவீனகால தொழில்நுட்பம் நம்மை அடிமைக்காலத்துக்கு அழைத்துச் செல்கிறது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டுவிற்கும், பெகாசஸ் விவகாரத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. ஹிரோஷிமாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தார்கள், பெகாசஸ் விவகாரத்தில் உயிராக நினைக்கும் சுதந்திரம் கொல்லப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் உளவுபார்க்கப்பட்டுள்ளனர், நீதித்துறை, ஊடகத்தினர் கூட உளவில் இருந்து தப்பிக்கவில்லை. சில ஆண்டுகளுக்குமுன்பே தலைநகரில் சுதந்திரத்துக்கான சூழல் முடிந்துவிட்டது. இந்த பெகாசஸ் செயலிக்கு யார் பணம் செலுத்தியது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

300 செல்போன்கள் ஒட்டுக் கேட்க 6 லைசன்ஸ் தேவைப்படும். இதற்கான பணத்தை யார் செலவிட்டது. என்எஸ்ஓ நிறுவனம் தங்களின் செயலியை அரசாங்கத்துக்கு மட்டுமே விற்கும் எனத் தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இ்ந்தியாவில் எந்த ஆட்சியி்ல் இதுவாங்கப்பட்டது. 300 பேரைக் கண்காணிக்க ரூ.300 கோடி செலவிடுவதா. உளவு பார்ப்பதற்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட நம்முடைய நாட்டுக்கு நிதித்திறன் இருக்கிறதா

இவ்வாறு ராவத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x