

ஆந்திர மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக கடலோரப் பகுதிகள் மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பின. இந்நிலையில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவிபட்டினம் பகுதியில் உள்ள கண்டி போச்சம்மா கோயில் முற்றிலும் நீரில் மூழ்கியது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுமார் 30 கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. கிராமங்களில் இருந்து சிறிய படகுகள் மூலம் மக்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று வருகின்றனர்.
போலவரம் அணைக் கட்டும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் அங்கு தேங்கிய தண்ணீர் திறக்கப்பட்டதால் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவை இருளில் மூழ்கியுள்ளன. மழை, வெள்ளத்தை தொடர்ந்து மக்களுக்கு தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் ஏற்படலாம் என்பதால் மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.