

பஞ்சாப் மாநில காங்கிரஸில் நிலவிவந்த உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக கட்சி யின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் கடந்த சில வாரங்களாக விமர்சித்து வந்தனர். இதனால் இருதரப்பிலும் பிரச்சினை அதிகரித்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். இதை ஏற்காத அமரீந்தர், தன்னிடம் சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இதனால் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை அமரீந்தர் புறக்கணிப்பார் என கூறப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்களுக்கு அமரீந்தர் நேற்று முன்தினம் அளித்த தேனீர்விருந்தில் சித்து பங்கேற்றார். அமரீந்தரிடமும் பேசினார். இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் அமரீந்தர் பங்கேற்றார்.
இந்நிலையில் பஞ்சாப் உட்கட்சி மோதல் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப் பினர். இதற்கு ராகுல் காந்தி, “பஞ்சாப் உட்கட்சி பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. நீங்களே இதைப் பார்க்கலாம்” என்று தெரிவித்தார். - பிடிஐ