Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

வளர்த்த நாய்க்கு சிலை வைத்து நினைவு நாள் அனுசரித்த எஜமான்

ஆந்திராவில் 5-ம் ஆண்டு நினைவு நாளில் வளர்ப்பு நாய்க்கு வெண்கல சிலை வைத்து கொண்டாடிய எஜமான் ஞானபிரகாஷ்.

விஜயவாடா

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாபுலபாடு மண்டலத்தில் உள்ள அம்பாபுரத்தை சேர்ந்த விவசாயி ஞானபிரகாஷ் ராவ். இவர் சில ஆண்டுகளாக ‘சுனக ராஜா’ எனும் நாயை பாசத்துடன் வளர்த்தார். அந்த நாயும் இவர்களின் குடும்பத்தாரோடு மிகவும் அன்பாகவும், பாசமாகவும் பழகி வந்தது. இதனிடையே ஞானபிரகாஷ் தனது 2 மகள்களுக்கு திருமணமும் செய்து மாமியார் வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்.

மனைவியும் ஏற்கனவே இறந்து விட்டதால், வீட்டில் ஞானபிரகாஷுக்கு துணையாக ‘சுனக ராஜா’ மட்டுமே இருந்தது. அது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உடல் நலம் சரியின்றி இறந்து விட்டது. அதிலிருந்து அந்த நாயின் நினைவு நாளை ஞான பிரகாஷ் மிகவும் தடபுடலாக அனுசரித்து வருகிறார். நேற்று அந்த நாயின் 5-ம் ஆண்டு நினைவு நாளும் இதேபோல் தடபுடலாக அனுசரிக்கப்பட்டது. கிராமத்தின் பல இடங்களில் நாய்க்கு பேனர்கள் வைக்கப்பட்டன.

‘‘குடும்பத்தில் ஒருவனாக பழகிய சுனகராஜாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்” என அந்த பேனரில் எழுதப்பட்டு படத்துடன் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த பலர் ஆச்சரியப்பட்டனர்.

பின்னர், 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அந்த நாய்க்கு தனது வீட்டில் வெண்கல சிலையையே வைத்து மாலை போட்டு, அதற்கு பிடித்தமான உணவுகளை படைத்து அனுசரித்தார் ஞானபிரகாஷ். மேலும், அந்த ஊர்க்காரர்களை வீட்டுக்கு அழைத்து விருந்தும் படைத்து மகிழ்ச்சி அடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x