டெல்லியில் வாகனக்கட்டுப்பாட்டுக்கு அமோக ஆதரவால் மீண்டும் அமலாக விரைவில் அறிவிப்பு

டெல்லியில் வாகனக்கட்டுப்பாட்டுக்கு அமோக ஆதரவால் மீண்டும் அமலாக விரைவில் அறிவிப்பு
Updated on
1 min read

ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகனங்களின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டு வர டெல்லிவாசிகளிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த 90 சதவிகித ஆதரவால் விரைவில் அமல்படுத்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு சாலைகளில் வாகனக் கட்டுப்பாடு கொண்டு வந்தது டெல்லி அரசு. கடந்த ஜனவரி 1 முதல் 15 தினங்களுக்கு சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டதற்கு டெல்லிவாசிகள் இடையே ஆதரவு பெருகியது. இதற்காக, இணையதளம், ஈமெயில், போன், மிஸ்டு கால் மற்றும் நேரில் என பொதுமக்களிடம் டெல்லி அரசு கருத்து கேட்பு நடத்தியது. இதில், கலந்து கொண்ட 90 சதவிகித டெல்லிவாசிகள் வாகனங்களுக்கான கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவர ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து டெல்லி அரசிடம் இருந்து ‘தி இந்து’விற்கு கிடைத்துள்ள தகவலின்படி 10 லட்சம் போன் ஆதரவு, 1.8 லட்சம் மிஸ்டு கால்கள், இணையதளத்தின் மூலமான ஆதரவு 28,000 மற்றும் 9,000 ஈமெயில்கள் கிடைத்துள்ளன. இத்துடன் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் டெல்லி முழுவதிலும் நடத்திய ஜன்சபைகளிலும் முழு ஆதரவு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, கடந்த முறையை விட அதிக கட்டுப்பாடு மற்றும் சில மாற்றங்களுடன் மீண்டும் வாகனக் கட்டுப்பாட்டை கொண்டு வர முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. தனது கடும் இருமல் சிகிச்சைக்காக பெங்களூரு

சென்று நேற்று முன் தினம் திரும்பியவர் தன் அமைச்சரவை சகாக்களுடன் வாகனக் கட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எந்த தேதி முதல் என்பது உட்பட இது குறித்து அறிவிப்பு விரைவில் டெல்லி அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in