கேரளாவில் ஒரே நாளில் 18,531 பேருக்கு கரோனா தொற்று: 50 நாட்களில் இல்லாத அளவு உயர்வு; மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்

கேரளாவில் ஒரே நாளில் 18,531 பேருக்கு கரோனா தொற்று: 50 நாட்களில் இல்லாத அளவு உயர்வு; மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்
Updated on
1 min read

கேரளாவில் இன்று ஒரே நாளில் 18,531 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. கடந்த 50 நாட்களில் இல்லாத அளவு கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கேரளாவில் சில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் 12,818 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் நேற்று 17,518 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்தநிலையில் இன்றும் அங்கு கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 50 நாட்களில் இல்லாத ஒன்றாகும்.

இன்று ஒரே நாளில் 18,531 பேருக்கு தொற்று உறுதியானது. 98பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 15,969 ஆக உயர்ந்துள்ளது. 15,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய் பதிப்பு 11.98 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து அம்மாநிலத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி மத்திய - மாநில அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டும் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது, ஹோட்டல், டீ கடைகளில் பார்சல் மட்டும் வழங்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

கரோனா பரவல் அதிகமுள்ள மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in