மீராபாயின் வரலாற்றுச் சாதனையை ஒவ்வொரு இந்தியரும் கொண்டாடுகின்றனர்: அமித்ஷா புகழாரம்

மீராபாயின் வரலாற்றுச் சாதனையை ஒவ்வொரு இந்தியரும் கொண்டாடுகின்றனர்: அமித்ஷா புகழாரம்
Updated on
1 min read

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மீராபாய் சானுவின் வெற்றியை ஒவ்வொரு இந்தியரும் கொண்டாடுகின்றனர் என்று உள்துறை அமைசர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில், பளுதூக்குதல் போட்டியில் மகளிர் பிரிவில் மணிப்பூர் வீராங்கனை ஷாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

49 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்குதலில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 202 கிலோ (87 கிலோ ஸ்நாட்ச், 115 கிலோ க்ளீன் ஜெர்க்) தூக்கி 4 விதமான முயற்சிகளிலும் அசத்தி வெள்ளியை உறுதி செய்துள்ளார்.

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்த சானு, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் நாடு திரும்புகிறார்.

இந்நிலையில், இவரது வெற்றியை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரும் மீராபாய் சானுவை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

இது குறித்து அனுராக் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் மீராவிடம் பேசி வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவருடைய வியத்தகு வெற்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் சிலிர்க்கச் செய்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை ஒவ்வொரு இந்தியரும் கொண்டாடுகின்றனர். இது ஒரு பெருமித தருணம்" என்று பதிவிட்டுள்ளார்.

பளுதூக்குதல் போட்டியில் கடந்த 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பிரிவில் கர்னம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்றதுதான் கடைசி. அதன்பின் 21 ஆண்டுகள் இடைவெளியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in