

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கர்நாடக முதல்வராக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், "கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்யப்போவதாக எனக்கு எந்தத் தகவலும் இல்லை. அதேபோல், நான் அந்தப் பதவியில் அமர்த்தப்படலாம் என்றும் யாரும் என்னிடம் கூறவில்லை. ஆனால், ஊடகங்கள் தான் இப்படியான விஷயங்களைப் பற்றி பேசுகின்றன. நான் இதுபோன்ற ஊகங்கள் அடிப்படையிலான செய்திகளுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவர் நட்டாவும் முடிவு செய்வார்கள். பாஜகவைப் பொறுத்தவரை எல்லாமே கட்சித் தலைமை தான் முடிவு செய்யும். ஏற்கெனவே அந்தப் பொறுப்பில் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அமித் ஷா ஆகியோர் இருந்தனர். இப்போது அந்தப் பதவியில் நட்டா இருக்கிறார்" என்று கூறினார்.
ஜூலை 26-ம் தேதி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைகிறது, ஜே.பி.நட்டாவின் முடிவை ஏற்று செயல்படுவேன் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடகமுதல்வராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சிக்கின்றனர்.
அத்துடன் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.
எடியூரப்பா அண்மையில் தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். அவர்களை எடியூரப்பா சமாதானம் செய்து வருகிறார்.
இந்நிலையில், "ஜூலை 26-ம் தேதியுடன் கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன்பிறகு என்ன முடிவு என்பதை ஜே.பி.நட்டா முடிவு செய்வார். அதனை நான் பின்பற்றுவேன்.
பாஜகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்வதே எனது பணி. இதில் எந்த மாற்றமும் இல்லை. கட்சித் தொண்டர்கள், மடாதிபதிகள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்தச் சூழலில்தான், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கர்நாடக முதல்வராக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.