Published : 24 Jul 2021 03:23 PM
Last Updated : 24 Jul 2021 03:23 PM

இந்தியாவில் மூன்றாவது அலை எப்படி இருக்கும்? எய்ம்ஸ் தலைவர் சொல்வதென்ன?

இந்தியாவில் மூன்றாவது அலை எப்படி இருக்கும் என்பது குறித்து எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா சில கணிப்புகளை முன்வைத்துள்ளார்.

தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:

இந்திய மக்கள் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றினால், தடுப்பூசித் திட்டத்தின் வேகம் அதிகரித்தால் மூன்றாவது அலையைத் தள்ளிப் போடலாம். இல்லை ஒருவேளை மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதன் தாக்கம் குறைவானதாக இருக்கலாம்.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் போது மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு உச்சம் தொட்டது. இது உலக அளவில் கவனம் பெற்றது. இப்போது அன்றாட தொற்று எண்ணிக்கை சரிந்து வருகிறது. ஆனால், காந்த வாரம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பார்க்கும் போது தீடீரென இந்த எண்ணிக்கை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது. நம் நாட்டில் இன்னும் 40% மக்கள் கரோனா தொற்று அபாயத்தில் தான் இருக்கின்றனர். அதேவேளையில் நம் நாட்டில் 67% மக்களுக்கு கரோனா ஆன்டிபாடி (பிறபொருள் எதிரி) உருவாகியுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுவதும், கரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுமே இந்த நோய்ப்பரவலைத் தடுக்கும்.

மூன்றாவது அலை இப்போதுதான் ஏற்படும் என்று ஏதும் குறிப்பிட்ட காலகட்டத்தை அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், வெகுவிரைவில் கரோனா அன்றாட பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் மக்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல், சமூக விலகலைக் கடைபிடித்தல் ஆகியனவற்றைப் பின்பற்றினால், தடுப்பூசி செலுத்துவதிலும் கவனம் செலுத்தினால் நிச்சயமாக நாம் மூன்றாவது அலையைத் தள்ளிப்போட முடியும். ஒருவேளை மூன்றாவது அலை வந்தாலும் கூட முதல் மற்றும் இரண்டாவது அலையை ஒப்பிடுகளையில் குறைந்த அளவிலேயே பாதிப்பைக் காண முடியும்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இன்னும் இந்திய மக்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. நிறைய மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தால், தீவிர பாதிப்பு, மருத்துவமனை சிகிச்சையின் அவசியம் ஆகியனவற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம். இது, இப்போது அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் வெளிப்படையாக உறுதியாகி உள்ளது.

இதுவரை நம் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், 6 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதே வேகத்தில் சென்றால் டிசம்பர் இறுதிக்குள் குறைந்தது 60% பேருக்காவது தடுப்பூசி செலுத்துவிடலாமா என்ற கேள்வி எழலாம். ஆனால், அடுத்த மாதம் முதல் மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவுள்ளது. அப்போது தடுப்பூசி பணி வேகமெடுக்கும்.

இந்திய மக்களில் மூன்றில் இருவருக்கு கரோனா ஆன்டிபாடி உருவாகியிருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கைகள் சொன்னாலும் கூட, இந்தியா ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் மந்தை எதிர்ப்புசக்தியைப் பெற்றுவிட்டது எனக் கூறமுடியது.

ஏனெனில் வைரஸ் உருமாறக் கூடியது. இதுவரை கரோனா வைரஸ் பல்வேறு விதமாக உருமாறிவிட்டது. இந்நிலையில், வைரஸ் உருமாற மாற மக்கள் இன்னும் முழுமையாக ஆபத்திலிருந்து விலகவில்லை என்றே அர்த்தமாகும். அப்போது ஹெர்ட் இம்யூனிட்டி என்ற கருத்தே கேள்விக்குள்ளாகிவிடும்.

லாங் கோவிட் எனப்படும் நீண்டநாள் பாதிப்புகளில் இருந்து கரோனா தடுப்பூசி மக்களை காக்கிறது. எனவே, தடுப்பூசியில் மக்கள் முழு ஈடுபாடு காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் கரோனா மரணங்கள் அரசாங்கம் சொல்வதைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, "நிச்சயமாக அப்படி இருக்க வாய்ப்பில்லை. கரோனாவுக்கு முந்தைய இறப்பு விகிதத்தையும், இப்போதுள்ள இறப்பு விகிதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இது தெரிந்துவிடும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x