கரோனா நோயாளிகளை குணப்படுத்த ஆயுஷ் மருந்துகள்: மத்திய அரசு தகவல்

கரோனா நோயாளிகளை குணப்படுத்த ஆயுஷ் மருந்துகள்: மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

கோவிட்-19 அறிகுறிகள் உள்ளவர்களை குணப்படுத்துவதற்கான செயல்திறன் மிக்க ஆயுஷ் மருந்துகளை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஆயுஷ் இணை அமைச்சர் மகேந்திரபாய் முஞ்சப்பாரா கூறியதாவது:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு, உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு, எய்ம்ஸ் மற்றும் ஆயுஷ் அமைப்புகளில் இருந்து பிரதிநிதிகளைக் கொண்ட ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பல்துறை பணிக்குழுவை ஆயுஷ் அமைச்சகம் அமைத்துள்ளது.

விரிவான ஆய்வு மற்றும் நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு, கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கான மருத்துவ செயல்முறைகளை ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிக்குழு உருவாக்கியுள்ளது.

அஷ்வகந்தா, யாஷ்டிமது, குடுச்சி + பிப்பலி மற்றும் ஒரு மூலிகை மருந்து (ஆயுஷ்-64) ஆகிய நான்கு முறைகளை இக்குழு ஆய்வு செய்துள்ளது. கோவிட்-19 அறிகுறிகள் உள்ள நோயாளிகளை குணப்படுத்துவதற்கான செயல்திறன் மிக்க ஆயுஷ் மருந்துகளை அடையாளம் காண்பதற்கான 126 ஆய்வுகள் நாட்டிலுள்ள 152 மையங்களில் நடைபெற்று வருகின்றன.

மக்களிடையே ஆயுஷ் மருத்துவ முறைகளின் பயன்பாடு மற்றும் கோவிட்-19-ஐ தடுப்பதில் ஆயுஷின் தாக்கம் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக ஆயுஷ் சஞ்ஜீவனி கைப்பேசி செயலியை ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

சுமார் 1.47 கோடி பேர் அளித்த தகவல்களின் படி, 85.1 சதவீதம் பேர் கோவிட்-19-ஐ தடுப்பதற்காக ஆயுஷ் மருத்துவ முறைகளை பயன்படுத்தியுள்ளனர். அவர்களில் 89.8 சதவீதம் பேர் ஆயுஷ் மூலம் பலன் பெற்றதாக கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in