

மைசூருவில் உள்ள கபினி அணை நிரம்பியதை தொடர்ந்து காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்டபகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்வதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்துதிடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளது.
கபிலா ஆறு உற்பத்தியாகும் கேரளாவின் வயநாட்டிலும் கனமழை தொடர்வதால் கபிலா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் மைசூரு மாவட் டத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 104.75 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 20 ஆயிரத்து 986 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 4 ஆயிரத்து 592 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 2,283.85 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 23 ஆயிரத்து 129 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 23 ஆயிரத்து 300 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்தும் மொத்தமாக தமிழகத்துக்கு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர்திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள2 ஆயிரத்து 892 கனஅடி நீர்கால்வாய்கள் மூலம் மைசூரு,மண்டியா மாவட்ட விவசாயிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
காவிரியில் தமிழகத்துக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேகேதாட்டு, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.