

ஆந்திர மாநிலத்தில் வசிக்கும் காப்பு சமுதாயத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு துனி நகரில் நடைபெற்ற போராட் டத்தின்போது, விஜயவாடா-விசாகப்பட்டினம் இடையே செல்லும் ரத்னாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலை ஆர்பாட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.
காப்பு சமுதாயத்தினருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பத்மநாபம் தனது மனைவியுடன் அவரது சொந்த கிராமமான கிர்லம்பூடியில், கடந்த நான்கு நாட்களாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாநில காங்கிரஸ் தலைவர் ரகுவீரா ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி உட்பட காங்கிரஸார் நேற்று துனி நகருக்கு சென்றனர். அப்போது ராஜமுந்திரி ரயில் நிலையம் சென்ற இவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, மாநில அமைச்சர்கள் அச்சம் நாயுடு உள்ளிட்டோர் பத்மநாபத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பத்மநாபம் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.