

டோக்கியோ ஒலிம்பிக்கில், உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களின் நம்பமுடியாத சாதனை நிகழ்வுகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடக்கிறது. டோக்கியோவில் கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுடன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது.
ஜப்பானில் கரோனா பரவல் அச்சம் காரணமாக தொடக்க நாள் நிகழ்ச்சியில் பெரும்பாலான இந்திய வீரர்கள் பங்கேற்கவில்லை. அணிவகுப்பில் ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் மட்டும் பங்கேற்க உள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நிலையில் பிரதமர் மோடி ஜப்பான் பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் 2020க்காக ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில், உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களின் நம்பமுடியாத சாதனை நிகழ்வுகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம் " என்று கூறியுள்ளார்.