

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் இஸ்ரேலும், பிரான்ஸும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்திய அரசு எந்தவிதமான விவாதத்துக்கும் மறுக்கிறது, அதிகாரபூர்வற்ற கண்காணிப்பு ஏதும் செய்யவில்லை எனவும் மறுக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தனியாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால் பெகாசஸ் மென்பொருள் மூலம் யாரையும் கண்காணிக்கவில்லை, ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டு என ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கூறி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ சுதந்திரத்தின் அளவுகோலின்படி சுதந்திரமான ஜனநாயகம் கொண்ட பிரான்ஸ், மற்றும் கடினமான ஜனநாயகம் கொண்ட இஸ்ரேலுக்கு எதிராக தரவரிசைப்படுத்த முடியும்.
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் அரசு ஒரு விசாரணைக் கமிஷனையும் உருவாக்கியுள்ளது. ஆனால், எந்தவிதமான அதிகாரபூர்வமற்ற கண்காணிப்பும் செய்யவில்லை என்று மறுக்கும் இந்திய அரசு, இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தவும் மறுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்