கேரளாவில் 4-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த 105 வயது மூதாட்டி பாகிரதி அம்மாள் காலமானார்: பிரதமர் மோடியால் புகழப்பட்டவர்

பாகிரதி அம்மாள் தேர்ச்சி அடைந்ததும் அவரைச் சந்தித்து வாழ்த்திய எழுத்தறிவுப் பணி இயக்குநர் ஸ்ரீகலா: கோப்புப் படம்.
பாகிரதி அம்மாள் தேர்ச்சி அடைந்ததும் அவரைச் சந்தித்து வாழ்த்திய எழுத்தறிவுப் பணி இயக்குநர் ஸ்ரீகலா: கோப்புப் படம்.
Updated on
1 min read

பிரதமர் மோடியால் புகழப்பட்டு நரி சக்தி புரஷ்கார் விருது பெற்ற கேரளாவின் மிக அதிக வயதில் கல்வி கற்று 4-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த பாகிரதி அம்மாள் நேற்று இரவு வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 107.

கொல்லம் மாவட்டம், பரக்குளத்தில் வசித்து வந்தவர் பாகிரதி அம்மாள். இவர் குடும்பச் சூழல் காரணமாக 3-ம் வகுப்புடன் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.

திருமணம் ஆகி 6 குழந்தைகளுக்குத் தாயான பாகிரதி அம்மாளின் 30-வது வயதில் அவரின் கணவரும் உயிரிழந்தார். இதனால் படிக்கும் வாய்ப்பு அவருக்கு அருகிப்போனது. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் பாகிரதி அம்மாள் கவனம் செலுத்தினாலும் தான் படிக்க வேண்டும் எனக் குடும்பத்தாரிடம் அடிக்கடி தனது ஆசையைக் கூறிவந்தார்.

தனது 6 குழந்தைகளையும் படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணமும் செய்து பேரன் பேத்தி, கொள்ளுப்பேரன் வரை கண்ட பாகிரதி அம்மாளுக்கு, கல்வி மீதான நாட்டம் குறையவில்லை.

இந்நிலையில் கேரள அரசின் எழுத்தறிவு இயக்கத் திட்டத்தின் கீழ், தனது மகன் உதவியுடன், 4-ம் வகுப்புக்கு இணையான கல்வியைப் பெற விண்ணப்பித்து, அதற்கான வகுப்புகளுக்குச் சென்று கடந்த ஆண்டு தேர்வு எழுதினார். சுற்றுச்சூழல், கணிதம், மலையாளம் ஆகிய பாடங்களில் தேர்வு எழுதிய பாகிரதி அம்மாள் மொத்தம் 275 மதிப்பெண்ணுக்கு 205 மதிப்பெண் பெற்று 4-ம் வகுப்பில் தோ்ச்சி பெற்றார்.

குறிப்பாக கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து பாகிரதி அம்மாள் சாதித்தார். அவர் தேர்ச்சி அடைந்ததைக் கேள்விப்பட்ட, கேரள மாநில எழுத்தறிவுப் பணி இயக்குநர்பி.எஸ்.ஸ்ரீகலா நேரில் சென்று சந்தித்து பாராட்டு தெரிவித்து, ஆசியும் பெற்றார்.

பாகிரதி அம்மாள் குறித்து அறிந்த பிரதமர் மோடி தனது 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் நாரீசக்தி புரஷ்கார் விருதும் பாகிரதி அம்மாளுக்கு வழங்கப்பட்டது.

107 வயதான பாகிரதி அம்மாளுக்கு 6 பிள்ளைகளும், 12 பேரன்களும், 15 கொள்ளுப் பேரன், பேத்திகளும் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in