சென்ட்ரல் விஸ்டா திட்டம்; சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் முறையாக நடத்தப்பட்டன: டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

டி.ஆர்.பாலு: கோப்புப்படம்
டி.ஆர்.பாலு: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கான தடையில்லாச் சான்றிதழ்கள் முறையாகப் பெறப்பட்டனவா என, மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான, டி.ஆர்.பாலு, நேற்று (ஜூலை 22) மக்களவையில் "சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை, சிறு சிறு திட்டங்களாகப் பிரித்து, தடையில்லாச் சான்றிதழ்கள் பெறுவதிலிருந்து விலக்குப் பெறப்பட்டதா? சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா?" என, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.

அதற்கு மத்திய அமைச்சர் அளித்த பதில்:

"சுற்றுச்சூழல் அனுமதி உள்பட அனைத்து தடையில்லாச் சான்றிதழ்களும், உரிய முறைப்படியே சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கான அனைத்து சிறு சிறு திட்டங்களுக்கும் பெறப்பட்டுள்ளன. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி, கடந்த ஜூன் 17, 2020-லேயே பெறப்பட்டது. சென்ட்ரல் விஸ்டா திட்டம், மத்திய மாநாட்டு மையம், பிரதமர் இல்லம், சிறப்புப் பாதுகாப்புக் குழு கட்டிடம், குடியரசுத் துணைத் தலைவரின் இல்லம் ஆகிய சிறு சிறு திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கடந்த மே 31, 2021 அன்று பெறப்பட்டது.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் முறையாக நடத்தப்பட்டன. பிரதமர் அலுவலகம், அமைச்சரவைச் செயலகம், தேசிய பாதுகாப்புக் குழு செயலகம் ஆகியவற்றுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள், நிபுணர் குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையுடன் கடந்த மே 21, 2021-ல், சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது".

இவ்வாறு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிபதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in