Last Updated : 23 Jul, 2021 11:26 AM

 

Published : 23 Jul 2021 11:26 AM
Last Updated : 23 Jul 2021 11:26 AM

சக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் வந்த ஆளில்லா விமானம்: ஜம்மு சர்வதேச எல்லையில் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

ஜம்மு பகுதியில் உள்ள சம்பா சர்வதேச எல்லையில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் வந்த ஆள் இல்லா விமானத்தை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

அந்த விமானத்தில் இருந்த சக்திவாய்ந்த ஐஇடி வெடிபொருட்களைக் கைப்பற்றி ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது

“இன்று அதிகாலை ஜம்மு மாவட்ட போலீஸார் அளித்த தகவலில், சம்பாவின் கனாசக் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் ஆள் இல்லா விமானம் சுற்றிவருவதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிவிரைவுப்படை அங்கு சென்று அந்த ஆள் இல்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தினர். 6 இறக்கைகள் கொண்ட அந்த ஆள் இல்லா விமானம் ஏறக்குறைய 5 கிலோ எடை கொண்ட சக்திவாய்ந்த ஐஇடி வெடிபொருட்களைச் சுமந்து 8 கி.மீ. தொலைவு சர்வதேச எல்லைக்குள் பறந்துவந்துள்ளது. அந்த விமானத்தின் ஒரு இறக்கையில் 5 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் இணைக்கப்பட்டிருந்தன.

சர்வதேச எல்லை அருகே பறந்த அந்த ட்ரோனை முதல் முறையாக பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளனர். அந்த விமானத்தில் இருந்த வெடிபொருட்களைக் கைப்பற்றி அது எங்கு தயாரிக்கப்பட்டது, அதன் மூலப்பொருட்கள் குறித்து தொழில்நுட்பரீதியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வெடிபொருட்கள் வேறு எங்காவது கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது, ஏதாவது ஒரு இடத்தில் வீசப்பட்டு வெடிக்க வைக்கவும் சதி செய்யப்பட்டிருக்கலாம். இந்த இரு காரணங்களுக்காக மட்டுமே ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்

முதல் கட்ட விசாரணையில் இந்த ட்ரோன், வெடிபொருட்களைக் கடத்துவதற்காக தீவிரவாதிகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் வெடிபொருட்களைக் கடத்த இதுபோன்ற ட்ரோன்களைப் பயன்படுத்துவார்களா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம்''.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் 27-ம் தேதி இதேபோன்று இரு ட்ரோன்கள் மூலம் வீசப்பட்ட வெடிபொருட்களால் ஜம்முவில் இரு விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்து தேசிய விசாரணை முகமை விசாரணை நடத்தி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x