

பழங்குடியினப் போராளியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சோனி சோரிக்கு மீண்டும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கடந்த வாரம் சோனி சோரியின் முகத்தின் மீது ஆசிட் போன்ற வேதிப்பொருள் வீசப்பட்டதில் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டார். தற்போது டெல்லியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதலைத் தொடர்ந்து அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால், சத்தீஸ்கர் மாவட்டத்தில் கீடம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பையும் மீறி நேற்றிரவு சோனி சோரியின் வீட்டருகே மிரட்டல் கடிதம் வீசப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், "உன் மகள்களுக்கு கிடைத்துள்ள போலீஸ் பாதுகாப்பு நினைத்து மகிழ வேண்டாம். உனக்கு மகன்களும், சகோதரிகளும் இருக்கின்றனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லை என்பதை மறந்துவிடாதே" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சோனி சோரி மீதான தாக்குதல் குறித்த விசாரணைக்கு மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை சத்தீஸ்கர் அரசு அமைத்துள்ளது.