

இந்தியா மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று ஜமாத்-உத்-தவா தீவிரவாத அமைப்பின் தலைவரும் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து இந்தியா, ஹபீஸ் சயீதின் இந்த எச்சரிக்கைகளை ‘பெரும் கவலை’ என்று வர்ணித்ததோடு, ஹபீஸ் சயீதுக்கு பாகிஸ்தான் கடிவாளம் போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஹபீஸ் சயீது கூறியது என்ன?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சயீத் பேசும்போது, 8 லட்சம் ராணுவத் துருப்புகளுடன் காஷ்மீரிகள் மீது இனப்படுகொலையை இந்திய ராணுவம் கட்டவிழ்த்து விடும் போது தங்கள் பாதுகாப்புக்காக பதான்கோட் பாணி தாக்குதலை நடத்த அவர்களுக்கு உரிமை இல்லையா?
பதான்கோட் விமானப்படை தளத்தின் மீதான ஒரு தாக்குதலை மட்டுமே நீங்கள் பார்த்தீர்கள். இந்தியா மீது மேலும் இதுபோன்ற தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம். என்று ஹபீஸ் சயீத் கூறியிருந்தார்.
மேலும் கடந்த ஜனவரி 2-ம் தேதி பதான்கோட் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்ற காஷ்மீரைச் சேர்ந்த ஐக்கிய ஜிகாத் கவுன்சில் தலைவர் சையத் சலாஹுதீனையும் சயீத் பாராட்டி பேசினார்.
ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்பினர் ஊடக நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், இந்தத் தடையை மீறி கடந்த மாதம் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் சயீத் பங்கேற்றார்.
ஜமாத் அமைப்பை தீவிரவாத அமைப்பாகவும் சயீதை தீவிரவாதியாகவும் ஐ.நா. கடந்த 2008-ம் ஆண்டே அறிவித்துவிட்டது. மேலும் சயீதின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் மற்றும் கவலை:
ஹபீஸ் சயீத் இவ்வாறு வெளிப்படையாக பேசித் திரிவது பற்றி கண்டனம் வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், ஹபீஸ் சயீதுக்கு பாகிஸ்தான் கடிவாளம் போட வேண்டும் என்று கூறியுள்ளது.
இது குறித்து அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும் போது, “ஹபீஸ் சயீத் உலக அளவில் பயங்கரவாதி என்று அங்கீகரிக்கப்பட்டவர். ஆனால் அவரோ தங்களது அமைப்பு சமூக ஊழியத்தில் ஈடுபடுவதாக கூறி வருகின்றார்.
அவர் ஈடுபட்டிருப்பது பயங்கரவாதச் செயல், பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டும் செயல். இது அனைவருக்குமே கவலையளிக்கும் விஷயமாகும். ஏனெனில் அவர் சுதந்திரமாக பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிறார்.
எனவே பாகிஸ்தான் அவருக்கு கடிவாளம் இடுவது அவசியம்” என்றார்.
பதான்கோட் விசாரணையில் பாகிஸ்தான் எந்த அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்ற கேள்விக்கு விகாஸ் ஸ்வரூப் நேரடியாக பதில் எதையும் தெரிவிக்காமல் பதான்கோட் தாக்குதல் நடத்தியவர்களை நீதிக்கு முன் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் தாங்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.