

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களைப் போல இந்து வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்கும் உரிமை வழங்கக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களைப் போல இந்து, ஜெயின், புத்த, சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்களின் அசையும், அசையா சொத்துகளை நிர்வகிக்க உரிமை வழங்க வேண்டும்,
இந்த வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்க உருவாக்கப்பட்டுள்ள மாநிலச் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை என அறிவிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்க ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க மத்திய அரசுக்கு, உத்தரவிட வேண்டும்.
திருப்பதி, குருவாயூர், வைஷ்ணவ தேவி ஆகிய கோயில்களில் கிடைக்கப்பெறும் வருவாய் ஆளுங்கட்சியினருக்கே பயன்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் 30 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதனை நிர்வகிக்கவும், பாதுகாக்கவும் போதுமான ஊழியர்களும், நிபுணர்களும் தமிழக அரசிடம் இல்லாததால், பழமையான பல கோயில்கள் பாழடைந்து வருகின்றன.
அதேபோல, தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு 5 லட்சம் ஏக்கர் நிலங்களும், 2.5 கோடி சதுர அடியில் கோயில் கட்டிடங்களும் உள்ளன. ஆனால், இவற்றில் இருந்து சுமார் 36 கோடி ரூபாய் அளவில் மட்டுமே வருமானம் வருகிறது. கோயில்களின் வருவாய் ஆதாரங்கள் சீர்கெடலோடு உள்ளன.
அதேபோல, தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் கடவுள் மறுப்பாளர்களால் நிர்வாகிக்கப்படுவது வேடிக்கையாக உள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்க ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க மத்திய அரசுக்கு, உத்தரவிட வேண்டும்'' எனக் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.