

உத்தரப் பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார் உள்ளிட்ட சில ஊடகங்களில் இன்று ஐடி ரெய்டு நடத்தப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்தில் சறுக்கல்களை சுட்டிக்காட்டியதாலேயே ஊடக நிறுவனங்கள் மீது அதிகாரத்தை துஷ்பிரேயகம் செய்து ஐடி சோதனை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், "வருமான வரித்துறை அதன் கடமையைச் செய்கிறது. எந்த அரசு அங்கங்களின் செயல்பாட்டிலும் நாங்கள் தலையிடுவதில்லை. எந்த ஒரு விஷயத்தையும் செய்தியாக்கும் முன் அதன் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையை அறிந்து செய்தியாக வேண்டும். சில நேரங்களில் குறைவான தகவல் பல பிரச்சினைகளை உருவாக்கிவிடுகிறது" என்றார்.
முன்னதாக இன்று டைனிக் பாஸ்கர் பத்திரிகையின் டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டது.
இது தவிர உத்தரப் பிரதேசத்தின் பாரத் சமாச்சார் என்ற தொலைக்காட்சி நிறுவனத்திலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட சேனல் வரி ஏய்ப்பு செய்துள்ளதால் விசாரணை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், எதிர்க்கட்சிகளோ மாநில அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள குளறுபடிகளை எடுத்துக் கூறியதாலேயே அந்த சேனல் மீது வருமான வரித்துறை ரெய்டு நடப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தியாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீது இன்னொரு கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இது ஜனநாயகத்தை நெறிக்கும் முயற்சி. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு எப்படி கோட்டைவிட்டது என்பதை டைனிக் பாஸ்கர் பத்திரிகை துணிச்சலோடு செய்திகளை வெளியிட்டது. உண்மையைச் சொல்லும் ஊடகங்கள் மீது இத்தகைய பழிவாங்குதல் நடவடிக்கை மேற்கொள்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளை உடைக்கும் செயல் என்று விமர்சித்துள்ளார்.