

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவந்தவர் எடியூரப்பாதான். அவர் இல்லாமல் கர்நாடகாவில் பாஜக ஆள முடியாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வராகக் கடந்த இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பி.எஸ். எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜக கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் எடியூரப்பாவை பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் விமர்சித்து வருகின்றனர்.
எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்வராக அமர்த்த வேண்டும் எனக் கூறி எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில் எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவுடன் கடந்த வாரம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது தான் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடியிடம் எடியூரப்பா கூறியதாகத் தெரிகிறது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை அம்மாநிலத்தைச் சேர்ந்த 30 முக்கிய மடங்களைச் சேர்ந்த மாடதிபதிகள் நேற்று சந்தித்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. எடியூரப்பா ஆதரவாளர்கள் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி இருப்பதால், அவர்களைச் சமாதானம் செய்யும் வகையில் நேற்று ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.
அவர் பதிவிட்ட கருத்தில், “பாஜகவின் உண்மையான தொண்டனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது மிகப்பெரிய கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். யாரும் எவ்விதமான போராட்டத்திலோ இல்லை மரியாதைக் குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் எடியூரப்பாவுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கர்நாடகாவில் முதன்முதலில் பாஜக ஆட்சியைக் கொண்டுவந்தவர் எடியூரப்பா. அவரை நீக்க சதி நடக்கிறது. அவர் இல்லாமல் மாநிலத்தில் பாஜகவை நடத்த முடியாது. பாஜகவுக்கு மீண்டும் எடியூரப்பா வந்தபின்தான் வெற்றி பெற முடிந்தது. எதற்காக மறுபடியும் அதே தவறைச் செய்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு நீண்டகாலமாகவே சுப்பிரமணியன் சுவாமி தீவிரமான ஆதரவு தெரிவித்து வருகிறார். தற்போது எடியூரப்பா ராஜினாமா செய்யப்போவதாக அறிந்ததையடுத்து, லிங்காயத் சமூகத்தின் மடாதிபதிகள் பலர் எடியூரப்பாவுக்கு ஆதரவாகச் சென்றுள்ளனர்.