

மத்திய அரசின் தவறான முடிவால் கரோனா 2-வது அலையில் இந்தியாவில் கூடுதலாக 50 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார வல்லுநர்கள் அபிஷேக் ஆனந்த், ஜஸ்டின் சான்டபர் ஆகியோர் இணைந்து இந்தியாவில் கரோனா 2-வது அலையில் நடந்த உயிரிழப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டனர்.
“சென்டர் ஃபார் குலோபல் டெவலெப்மென்ட்” என்ற அமைப்பின் மூலம் வெளியி்டப்பட்ட 3 விதமான அறிக்கையில் 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் மாதம் வரை இந்தியாவில் கூடுதலாக 50 லட்சம் பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிக்கையில், இந்தியாவில் இதுவரை கரோனாவில் 4.18 லட்சம் பேர் மட்டுமே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்டர் ஃபார் குலோபள் டெவலெப்மென்ட் அறிக்கையைச் சுட்டிக்காட்டியும், அதை தனது ட்வி்ட்டர் பக்கத்தில் இணைத்தும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், “ இது உண்மை. இந்திய அரசின் தவறான கொள்கைகளால் கரோனா 2-வது அலையில் நம்முடைய சகோதர, சகோதரிகள், தாய்மார்கள், தந்தைகள் என 50 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்விட்டரில் ராகுல் காந்தி கூறுகையில் “ விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கும் எந்தவிதமான இழப்பீடும் இல்லை. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் கண்ணீரில்தான் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
சென்டர் ஃபார் குலோபள் டெவலெப்மென்ட் அறிக்கையைச் சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா பேசினார். அப்போது கரோனாவில் உயிரிழந்தவர்கள் குறித்து நாடுமுழுவதும் கணக்கெடுப்பு நடத்தி, இழ்பபீடு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்