

ஆயிரம் கிலோ மீன், 10 ஆடுகள், 50 கோழிகள், 30 வகையான இனிப்புகள், 250 கிலோ ஊறுகாய் என மேலும் பல சீர்களை செய்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பியுள்ளார் பெண்ணை கட்டிக்கொடுத்த தந்தை. இந்த சீர் வரிசை குறித்துதான் தற்போது அந்த ஊரே பேசிக்கொண்டிருக்கிறது.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராமகிருஷ்ணாவின் மகள் பிரத்யூ ஷாவுக்கும், ஏனாம் பகுதியைச் சேர்ந்த பைக் டீலர் தோட்டராஜுவின் மகன் பவன்குமாருக்கும் சில மாதங்களுக்கு முன் தடபுடலாக திருமணம் நடை பெற்றது.
தற்போது தெலுங்கு மக்களுக்கு ஆஷாடம் (ஆடி) மாதம் என்பதால், புது மணப்பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு சீர் வைப்பதுவழக்கம். இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, மணமகளின் தந்தையான ராமகிருஷ்ணா தம்பதியினர், 1,000 கிலோ மீன், 250 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கோழிகள், 250 கிலோ மளிகை சாமான்கள், 30 குடங்களில் 30 வகையான இனிப்புகள், ஒரு டன் காய்கறிகள், 20 ஜாடிகளில் ஆவக்காய் ஊறுகாய் மற்றும் 250 கிலோ எடையில் விதவிதமான ஊறுகாய்கள், பழ வகைகள் ஆகியவற்றை சீராக அனுப்பி வைத்தனர்.
ராஜமகேந்திரவரத்தில் இருந்து ஊர்வலமாக இந்த சீர்வரிசைகள் ஏனாம் கொண்டு செல்லப்பட்டு மாப்பிள்ளை வீட்டில் வழங்கப்பட்டது. இதனை பார்த்த மாப்பிள்ளை வீட்டாரும், அந்த ஊர் மக்களும் அசந்து போயினர். இந்த சீர்வரிசையைக் காண்பதற்காக ஊர் மக்கள் மாப்பிள்ளையின் வீட்டில் கூடினர். பலர்தங்களது செல்போன்களால் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இதுகுறித்து பெண்ணின் தந்தை ராமகிருஷ்ணா கூறுகையில், ‘‘எனது ஒரே மகளுக்காக இன்னமும் நிறைய சீர்வரிசை செய்ய ஆசைப்படுகிறேன். வரும் நாட்களில் கூடுதலாக சீர்வரிசை செய்வேன்’’ என்றார்.