ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லையென்று கூறிய மாநிலங்கள் அரசியல் செய்கின்றன: பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லையென்று கூறிய மாநிலங்கள் அரசியல் செய்கின்றன: பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறிவந்த எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தற்போது அரசியல் செய்கின்றன’’ என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா குற்றம் சாட்டினார்.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பதில் அளித்த போது, “கரோனா 2-வது அலையின் போது நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை" என்று தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா நேற்று கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று 2-வது அலையின்போது ஆக்சிஜன் பற் றாக்குறை காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்று சில மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் நீதிமன்றத்திலேயே தகவல் தெரிவித்தன. ஆனால், அப்போது அந்தத் தகவலை அரசுகள் மாற்றிக் கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் அந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அரசியல் செய்து வருகின்றன.

மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் கொடுத்த தகவலை வைத்துத்தான் மத்தியஅமைச்சர் அவ்வாறு நாடாளு மன்றத்தில் பேசியிருக்கிறார். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரு நோயாளி கூட உயிரிழக்கவில்லை என்றுதான் அவை தகவல்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு அரசியல் செய்கின்றனர்.

ட்விட்டரில் பொய் சொல்வதற்கு முன்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன், ராகுல் காந்தி பேசவேண்டும். தவறான தகவல் தந்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதை ராகுல் முதலில் நிறுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in