

கர்நாடகா மாநிலத்தில் கேரள இளைஞர்கள் மூவர் மீது உள்ளூர் இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், மார்வின் மைக்கேல் ஜாய் என்ற இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ளது பூபாசப்தரா. இப்பகுதிக்குட்பட்ட சஞ்சய் நகரில் கல்வி நிமித்தமாக கேரள இளைஞர்கள் சிலர் தங்கியுள்ளனர். இந்நிலையில், கேரள இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் மார்வின் மைக்கேல் ஜாய் என்ற இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முதலில் பவ்ரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் நிமான்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தவிர நிகில் காமேஸ்வர், முகமது ஹசர் என்ற மாணவர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு மாணவர்களுள் ஒருவர் அளித்த பேட்டியில், "கேரள மாணவர்களை குறிவைத்து மட்டுமே உள்ளூர் இளைஞர்கள் தாக்குதல் நடத்துவதுபோல் தெரிகிறது. ஆனால் அதற்கான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை" என்றார்.
சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "கேரள மாநிலத்திலிருந்து இங்கு வந்து தங்கி கல்வி பயிலும் மாணவர்கள் பலரும் மாட்டு இறைச்சி உண்பதால் உள்ளூர்வாசிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மாட்டுக்கறி உண்டுவிட்டு கோயிலின் அருகே அவர்கள் தங்கியிருப்பதால் ஆத்திரம் கொண்ட உள்ளூர் இளைஞர்கள் சிலர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்" என்றனர்.